ரசிகர்கள் இல்லையேல் நடிகர்கள் இல்லை. அதிலும் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களை ஓட வைப்பதுகூட பெரிய விசயமாகி விட்டது. டிஜிட்டல் மயமாகி வ...
ரசிகர்கள் இல்லையேல் நடிகர்கள் இல்லை. அதிலும் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களை ஓட வைப்பதுகூட பெரிய விசயமாகி விட்டது. டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், ரிலீஸ் ஆன அன்றே சில படங்கள் இணைய தளங்க ளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன்காரணமாக, 100 நாட்கள், 150 நாட்கள் என்று படங்கள் ஓடிவந்த காலம் மலையேறி இப்போது 2 வாரங்கள் ஓடுவதே பெரிய விசயமாகி வருகிறது. அதனால்தான் ஒவ்வொரு நடிகர்களுமே தங்களது படம் வெளியாகும்போது ரசிகர்களைக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி படத்தை ஓட வைக்க நினைக்கிறார்கள்.
அந்த வகையில், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் அவர்கள் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது கட்அவுட், பேனர் வைத்து பரபரப்பு கூட்டி வருகிறார்கள். அதனால் அஜீத்துக்கும் தற்போது ரசிகர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. என்னதான் அவர் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டபோதும், சமீபகாலமாக அவுட்டோர்களுக்கு செல்லும்போது தேடி வரும் ரசிகர்களை சந்திக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, தனது வீட்டை முற்றுகையிடும் ரசிகர்களை கடந்த சில ஆண்டுகளாக திரும்பிகூட பார்க்காமல் இருந்த அஜீத், சமீபத்தில் ஒருநாள் தனது வீட்டிற்கு வந்திருந்த ரசிகர்களை உள்ளே வரவைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளார். அதோடு, இனிவருங்காலங்களில் ரசிகர்களை அவ்வப்போது சந்திக்கவும் அஜீத் முடிவு செய்திருப்பதாக அவரது தரப்பில் சொல்கிறார்கள்.