தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக திரைப்படங்களின் இரண்டாம் பாகம் என்ற நிலை மாறி அடுத்த கட்டத்திற்கு மூன்றாம் பாகம் என்ற நிலைக்குக் கொண்டு சென்...
தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக திரைப்படங்களின் இரண்டாம் பாகம் என்ற நிலை மாறி அடுத்த கட்டத்திற்கு மூன்றாம் பாகம் என்ற நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்படி ஒரு விஷயத்தை 'காஞ்சனா' படம் ஏற்கெனவே ஆரம்பித்து வைத்தது.
தற்போது 'சிங்கம்' படத்தின் மூன்றாவது பாகமும் உருவாகி வருகிறது. நேற்று வெளியான 'அரண்மனை 2' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏற்கெனவே இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்தையும் உருவாக்க இயக்குனர் சுந்தர் .சி திட்டமிட்டுள்ளார். இரண்டாவது பாகத்தின் கிளைமாக்சிலும் ஒரு பொம்மை மீண்டும் அரண்மனைக்குள் நுழைவதைப் போலத்தான் முடித்திருப்பார். அதனால் மூன்றாவது பாகம் வரப் போவது என்பதை அவர்களே சொல்லிவிட்டார்கள்.
இது பற்றி இயக்குனர் சுந்தர் .சியிடம் கேட்ட போது, “ஸ்பைடர் மேன், சூப்பர் மேன்” போல அடுத்தடுத்த பாகங்களை தமிழிலும் இயக்குவதில் தவறில்லை. ஹாலிவுட் படங்களிலேயே அனைத்து பாகங்களின் ஒரு வரிக் கதை என்று பார்த்தால் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதைச் சொல்லியிருக்கும் விதத்தில்தான் வித்தியாசப்படுத்தியிருப்பார்கள். சில சமயங்களில் புதிய கதாபாத்திரங்களையும் சேர்த்திருப்பார்கள். அது போலவே 'அரண்மனை' படத்தின் மூன்றாவது பாகத்தையும் இயக்கும் எண்ணம் உள்ளது,” என்றார்.
அவரே அமைதியாக இருந்தாலும் படத்திற்குக் கிடைக்கம் வசூலைப் பார்த்து வினியோகஸ்தர்கள் அமைதியாக இருப்பார்களா என்ன ?. அவர்களே அட்வான்ஸ் கொடுத்து சுந்தர் .சியை இயக்க வைத்துவிட மாட்டார்களா ?
