ஒஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக (சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை) கருதப்படும் கோல்டன் குளோப் ...
ஒஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக (சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை) கருதப்படும் கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் நட்சத்திர ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்முறை நடைபெற்ற 73ஆவது கோல்டன் குளோப் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்களில் „தி ரெலவன்ட்... மற்றும் மார்ஷியன் ஆகியத் திரைப்படங்கள் அதிக விருதுகளை பெற்று முன்னிலை வகித்தன. மெக்சிகோவை சேர்ந்த பிரபல இயக்குநரான அலெஜான்ட்ரோ கொன்ஸலெஸ் இனரிட்டு இயக்கத்தில் அண்மையில் வெளியான „தி ரெலவென்ட் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய விருதுகளை பெற்றுக்கொண்டது.
பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த சம்பவமாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் நடுக்காட்டில் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் லியோனார்டோ டிகேப்ரியோ, கரடியால் தாக்கப்பட்டு, குற்றுயிராக கிடந்து, அங்கிருந்து தப்பிவரும் கதையம்சமும் கதைக்கேற்ப பிரமாண்டமான காட்சி அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இதில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய லியோனார்டோ டிகேப்ரியோ சிறந்த நடிகராக தெரிவானார்.
அதேவேளை, தாய்க்கும் மகளுக்குமிடையிலான மென்மையான பந்தத்தை கருவாக வைத்து எடுக்கப்பட்ட „ரூம்... என்றத் திரைப்படத்தில் தாய்மையின் உள்ளுணர்வுகளை தனது சிறப்பான நடிப்புத்திறனால் மெருகூட்டி, வெளிப்படுத்திய பிரையி லார்சன் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை தட்டிச்சென்றார். சிறந்த திரைப்படம் - நாடகம் என்ற பிரிவில் போட்டியிட்ட „தி ரெலவன்ட் திரைப்படம் முதலிடத்தை வென்றது. சிறந்த திரைப்படம் - இசை அல்லது நகைச்சுவை பிரிவில் தி மார்ஷியன் திரைப்படம் முதலிடத்துக்கு தெரிவானது.