காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை படங்களை இயக்கி வந்த சுந்தர்.சி இப்போது பேய் கதைக்கு மாறி இருக்கிறார். ஏற்கனவே அரண்மனை பேய் படத்தை எடுத்தார். ...
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை படங்களை இயக்கி வந்த சுந்தர்.சி இப்போது பேய் கதைக்கு மாறி இருக்கிறார். ஏற்கனவே அரண்மனை பேய் படத்தை எடுத்தார். அந்த படம் ரசிகர்கள் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அரண்மனை இரண்டாம் பாகத்தை உருவாக்கி திரைக்கு கொண்டு வருகிறார்.
பேய் படங்களை தொடர்ந்து எடுப்பது ஏன் என்பது பற்றி சுந்தர்.சி அளித்த பேட்டி வருமாறு:
‘‘அரண்மனை’’ பேய் படத்தின் பயமுறுத்தலை ரசிகர்கள் கடைசி வரை உணர ‘க்ளைமாக்ஸ்’சில் ஜன்னலில் பேய் வந்து நிற்பதுபோல் ஒரு ‘சீன்’ வைத்திருப்பேன். அந்த சீனை பார்த்துவிட்டு இரண்டாவது பகுதி எப்போது எடுக்கப்போறீங்கன்னு எல்லோரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்போதான் ‘செகண்ட் பார்ட்’ கதைக்கு பொறி தட்டியது. தொடர்ந்து ‘அரண்மனை-2’ படம் உருவாகிடிச்சி. கதை ‘ரெடி’யானதும் முதல் ‘போன்’ ஹன்சிகாவுக்குதான் அடிச்சேன்.
விஷயத்தை கேட்டுட்டு இந்த படத்திலும் கண்டிப்பா நான் இருப்பேன்னு நான் கேட்கறதுக்கு முன்னாடியே முந்திக்கிட்டு ‘கால்ஷீட்’ கொடுத்தாங்க. முதல் பாகத்தை விட இரண்டாம் பகுதி ‘சூப்பரா’ வந்திருக்கு. சொல்ல முடியாது அரண்மனை-3 கூட வர வாய்ப்பு இருக்கிறது. சித்தார்த் முழு ஈடுபாட்டோடு நடிச்சி கொடுத்திருக்கார்.
அதே மாதிரி திரிஷா. ரெண்டு பேருக்குமே இது முதல் பேய் படம். செமையா நடிச்சிருக்காங்க. ஒரு காட்சியில் திரிஷா ஆன்னு கத்தனும். தொண்டை கட்டுற அளவுக்கு தொடர்ச்சியா இரண்டு மணி நேரம் கத்தி நடிச்சிருக்காங்க. செம கிளாமராவும் வர்றாங்க. ஒரு அம்மன் பாட்டு இருக்கு. அந்தப் பாடலை ‘ஷூட்’ பண்றது பெரிய சவாலாகவே இருந்தது.
150 அடி உயர அம்மன் சிலை முன்னாடி 350 ‘டான்ஸர்’, ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடிச்சாங்க. ஒவ்வொரு ‘ஷாட்’ எடுக்கும்போதும் நாலு பேருக்காவது நிஜமாகவே சாமி வந்திடும். ரொம்ப பிரமிப்பான அனுபவமா இருந்தது. இந்தப் பாட்டு படத்தின் ‘ஹைலட்டா’ இருக்கும்’’
இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.