அரசியலுக்கு உரிய தலைமை பண்பு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திடம் இல்லை, என, நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.ராதிகா சரத்குமார், தற்போது நடி...
அரசியலுக்கு உரிய தலைமை பண்பு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திடம் இல்லை, என, நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.ராதிகா சரத்குமார், தற்போது நடிகர் விஜய்க்கு அம்மாவாக, தெறி படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா, குடும்ப பணிகள், அரசியலுக்கு வருவது குறித்து, ராதிகா சரத்குமார் கூறியதாவது: சினிமாவில் இதுவரை, 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். ஒவ்வொரு படமும் எனக்கு பாடமாக அமைந்து வருகிறது. ஒவ்வொருரிடமும் தனித்தனியே கற்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. நாம் எந்த பணியை செய்தாலும், அதில் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்; பயத்தை காட்டினால், அவ்வளவு தான்.
வதந்தி பரப்பினர் : என் கணவர் சரத்குமாரின் கட்சி விஷயத்தில் நான் தலையிடுவது இல்லை. அவர், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வந்ததற்கு நான்
காரணமாக இருக்கலாம் என, சிலர் வதந்தியை பரப்பினர். கட்சியை பொறுத்தவரை, சரத் எடுக்கும் முடிவு தான்; நான் தலையிடுவதில்லை. அவரது மாநாட்டு முடிவை உங்களை போலவே நானும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்.
நிச்சயம் அரசியலுக்கு வருவேன் : இப்போதைக்கு, நான் அரசியலுக்கு வரமாட்டேன்; ஆனால், நிச்சயம் வருவேன். எந்த வேலையாக இருந்தாலும், அதில், 100 சதவீதம் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இப்போது வந்தால், முழு கவனத்துடன் செயல்பட முடியாது. நிறுவனம், குடும்ப பணிகளே நிறைய உள்ளன. சட்டசபை தேர்தலில், வேட்பாளராக களம் இறங்குவேனா என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. கட்சி மற்றும் தேர்தல் விஷயங்களை சரத்குமாரே பார்த்துக் கொள்கிறார். அதில், அவர் நேர்மையாக, 100 சதவீத உழைப்புடன் பணியாற்றி வருகிறார்.
விஜயகாந்த் சரிப்பட்டு வர மாட்டார் : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்துடன் பல படங்களில் நடித்துள்ளேன். சிறந்த மனிதர்; உதவும் குணம் கொண்டவர். ஆனால், சராசரியான மனிதராக இருந்து பார்க்கும்போது, தலைமை பண்புக்கு விஜயகாந்த் சரிப்பட்டு வர மாட்டார். திட்டி பேசும் அவரது அரசியல் பாணி, தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கவில்லை. காஞ்சிபுரம் மாநாட்டில் அவர் பேசியதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. என் கணவரிடம், விஜயகாந்த் பேசியதை ஒலிபரப்பி, புரிந்தால் சொல்லுங்கள் என்றேன். அவர் சிரித்தபடியே சென்று விட்டார்.
குஷ்பு பற்றி நோ கமென்ட்ஸ் : நடிகை குஷ்புவை பற்றி, நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. சமீபத்தில், பத்திரிகை, கார்ட்டூன் ஒன்றை பார்த்தேன். அதில், காந்தி, நேரு வளர்த்த காங்கிரசுக்கு சமர்ப்பணம் என, எழுதப்பட்ட வாசகத்தின் அருகே, நக்மாவும், குஷ்புவும் இருந்ததை பார்த்தேன்.
என் மகள் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடக்கிறது. அதற்கான பணிகளில்,பிசியாக உள்ளேன். மக்கள் தற்போது அமைதியாக இருப்பதை பார்க்கும் போது நிச்சயம், நல்ல முடிவையே எடுப்பார்கள் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.