சொந்த பிரச்னைகளை கடந்து, இன்று, தமிழில் மூன்று படங்கள்; தெலுங்கில் மூன்று படங்கள் என, விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க போராடும் அஞ்சலி, மாப்ள ச...
சொந்த பிரச்னைகளை கடந்து, இன்று, தமிழில் மூன்று படங்கள்; தெலுங்கில் மூன்று படங்கள் என, விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க போராடும் அஞ்சலி, மாப்ள சிங்கம்
படத்துக்காக, மீண்டும் கோலிவுட் பக்கம் தலைகாட்டினார். அவருடன் உரையாடியபோது...
மாப்ள சிங்கம் படத்தில் உங்க ரோல் என்ன?
முதல் முறையாக, இந்த படத்தில் வக்கீலாக நடித்துள்ளேன். இதில், என் மேக் அப், ஹேர்ஸ்டைல் மாறி இருக்கு. இதுவரை வந்த படங்களில் பார்த்த அஞ்சலி வேற; இந்த படத்தில் பார்க்கப் போற அஞ்சலி வேற. விமலுக்கும், எனக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. மூன்றாவது முறையாக விமலுடன் ஜோடி சேர்ந்துள்ளேன்.
எந்த மாதிரி கதையை தேர்வு செய்வீங்க?
மரத்தை சுற்றி டூயட் பாடுவதில் எனக்கு விருப்பமில்லை. நான் நடிக்கும் படம், எல்லாராலும் பேசப்படும் படமாக இருக்க வேண்டும். எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படமாக தேர்வு செய்து தான் நடிக்கிறேன்.
உங்க ரசிகர்கள் உங்களை எப்படி பார்க்க விரும்புகின்றனர்?
எல்லா ரசிகர்களின் ரசனையும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. ஒருவர், புடவையில் ஹோம்லியாக நடித்தால் நன்றாக இருக்கும் என்கிறார். மற்றொரு ரசிகர், மாடர்ன் உடைகளில் நடித்தால் தான் நல்லா இருக்கும் என்கிறார். என்னை பொறுத்தவரைக்கும், பக்கத்து வீட்டுப் பொண்ணு போல், ஹோம்லியாக நடிக்கத் தான் பிடிக்கும்.
சினிமாவுக்கு வந்து, 10 ஆண்டுகள் ஆகப் போகிறது. இதுவரை என்ன கற்றுக் கொண்டீர்கள்?
ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது, எப்படி இருந்தேனோ, அப்படித் தான் இன்னும் இருக்கிறேன். எதையும் வெளிப்படையாக பேசி விடுவேன். இயல்பாக இருக்க ஆசைப்படுவேன். என்னுடன் பழகியவர்களுக்கு இது, நன்றாக தெரியும். பொறாமையை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருப்பது தான், என்னுடைய சிறப்பம்சம்.
ஒரு நடிகையாக உங்கள், 'லிமிட்' என்ன?
படப் பிடிப்பில் இயக்குனர் என்ன சொல்கிறாரோ, அதை செய்து விட்டு, நம் வேலையை பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டும். தேவை இல்லாத விஷயங்களை தவிர்த்து விடுவது நல்லது; அது நம்மோட வேலையும் இல்லை.
சமீப காலமாக, உங்க எடை கூடி விட்டதாக...
இப்போது என்னை பாருங்கள்; எவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறேன். அந்தந்த படத்துக்கு தகுந்தாற்போல், உடல் எடையை கூட்டி, குறைத்து நடிக்கிறேன். ஆனால், குண்டாகி விட்டதாக வதந்தியை பரப்புகின்றனர். இறைவி படத்தில், ரொம்ப ஒல்லியாக இருக்க வேண்டும் என்றனர். அதற்காக, ஏழு கிலோ குறைந்தேன். இதற்கு மேல் எப்படி குறைக்க முடியும்.
நயன்தாராவுக்கு வரும் பட வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறீங்களாமே...?
அப்படியா... இது புதுசா இருக்கே. மற்றவர்கள் வாய்ப்பை தட்டிப் பறிக்க வேண்டிய நிலையில் எனக்கு இல்லை. எனக்கான படம், கண்டிப்பாக என்னை தேடி வரும். யாரும், யாருடைய
வாய்ப்பையும் தட்டிப் பறிக்கவும் முடியாது; பிடுங்கவும் முடியாது. வதந்திகளை நம்ப வேண்டாம்.
நடிகையர் பலரும், நகைக்கடை, ரியல் எஸ்டேட் என, சைடு பிசினசில் பிசியாகி விட்டனர்; நீங்கள்?
எனக்கு சினிமாவை தவிர, வேறு எதுவுமே தெரியாது. காஸ்ட்யூமில் ஆர்வம் உண்டு; ஆனால், அதை பிசினசாக மாற்றும் அளவுக்கு விவரம் தெரியாது. நிறைய டைம் இருக்கு;
எதிர்காலத்தில் பார்க்கலாம்.
தேர்தல் களம் சூடு பிடிக்கிறது; பிரசாரத்துக்கு யாரும் அழைத்தால் செல்வீர்களா?
அய்யோ... ஆள விடுங்க; அது, நமக்கு தெரியாது. அதில் ஆர்வமும் இல்லை.
சித்தி, இயக்குனர் பிரச்னை எல்லாம் முடிந்து விட்டதா?
அது, முடியுதோ, முடியலையோ. அதைப் பற்றி பேசி, புதிதாக எந்த பிரச்னையிலும் சிக்க விரும்பவில்லை. அதையெல்லாம், மறந்து, பல நாட்கள் ஆகி விட்டன. இப்போது, அம்மா, அண்ணன் உடன், ஐதராபாத்தில் வசிக்கிறேன். நான், என் குடும்பம், சினிமா; இவ்வளவு தான் என் உலகம்.