நடிகர் விஜய் நடித்து, பொங்கல் விழாவின்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள 'பைரவா' படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குமா, நடக்காதா ...
இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸையொட்டி, மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் மையங்களில் அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ளது விஜய் மக்கள் இயக்கம். இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமையின் சார்பில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக விஜய் பிறந்த நாளையொட்டி அன்னதான ஏற்பாடுகள் நடக்கும். அதுவும் இயக்க பொறுப்பாளர்கள் தங்கள் செலவில் செய்வார்கள். இந்நிலையில், முதல்முறையாக இயக்கத் தலைமையில் இருந்து அன்னதானம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள்.
இது அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகள் தான் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நம்புகின்றனர். "இதுநாள்வரை அவரது 59 படங்கள் வெளிவந்தபோதோ அல்லது ஜூன் 22ல் வரும் அவரது பிறந்த நாள் விழாவின்போதுதான் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களில் அன்னதானம், நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களை நடத்துவோம். அதுவும் எங்க கைக்காசை போட்டுதான் நடத்துவோம். அவரது பட ஆடியோ ரிலீஸூக்கெல்லாம் விழா எடுத்ததில்லை. ஆனால், 23-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் அவரது பைரவா பட ஆடியோ ரிலீஸையட்டி, ஒரு மாவட்டத்துக்கு ஐந்து அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள், பார்வையற்றோர் படிக்கும் பள்ளிகளில் அன்னதானம் போட சொல்லி தலைமையில் இருந்தே உத்தரவிட்டிருக்கிறார்கள். இது முதல்முறை.
இதற்கான செலவை ஏற்பதாகச் சொல்லி, செலவையும் தலைமையே ஏற்றிருக்கிறது. இப்படி தலைமையே விழாவுக்கான செலவை ஏற்பதும் இதுதான் முதல்முறை. அதுவும், எந்தந்த இடத்தில் அன்னதானம் பண்றோமோ அந்த இல்லத்தின் பெயர், அதன் தலைமை நிர்வாகியின் பெயர், நம்பர், எத்தனை பேர் அங்கே இருக்கிறார்கள் என்ற லிஸ்ட், எவ்வளவு செலவாகும் என்கிற கணக்கு எல்லா டீட்டலையும் கேட்டு வாங்கி இருக்காங்க," என்றனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.
"தமிழக அரசியலில் தற்போது அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்திற்கான ஆயத்தங்களை செய்ய இருக்கிறார். தற்போது உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தியிருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் புக்லெட் வடிவில் உறுப்பினர் படிவம் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க ஒன்றரை லட்சம் கிளை அமைப்புகள் உள்ளன. அனைத்து அமைப்புகளிலும் உறுப்பினர்களை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது," எனச்சொன்ன நிர்வாகிகள் புக்லெட்டையும் காண்பித்தனர். இதுவெல்லாம் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரம் தான் என்றார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய விஜய் மக்கள் இயக்க தஞ்சை மாவட்ட தலைவர் விஜய்சரவணன், "நடப்பதை எல்லாம் பார்த்தால் புதுசாவும், ஸ்பீடாகவும் இருக்கு. நாங்களும் இளைய தளபதியை பத்து வருஷமா அரசியலுக்கு வாங்கன்னு அழைச்சுகிட்டுதான் இருக்கோம். அதனால், பைரவா ஆடியோ ரிலீஸையொட்டி நடக்கிற விஷயங்கள், உறுப்பினர் சேர்க்கை விஷயம் எல்லாம் அவர் அரசியலுக்கு வருவதற்கான அடித்தளம் என்றால், எங்களுக்கு நல்லதுதானே" என்றார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் பேசினோம். "பைரவா பட ஆடியோ ரிலீஸை அம்மா இறந்த இந்த சூழலில் கிரான்டா கொண்டாட வேண்டாம்ன்னு இளைய தளபதி சொல்லி இருக்கார். ஆனால், மாவட்டங்கள்தோறும் அன்னதானம் பண்ணச் சொல்லி இருக்கோம். அதேபோல், உறுப்பினர்களையும் விறுவிறுப்பாக சேர்க்கச் சொல்லி இருக்கோம். ஆனால், இது அமைப்பை பலப்படுத்தவேயொழிய,அரசியல் பாதைக்காக இல்லை. இப்போதைக்கு இளைய தளபதி படம் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை" என்றார்.